அதன் பின் மாயாண்டி செல்வராஜா கஷ்டப்பட்டு ஒரு வெற்றி பெற்ற இயக்குனருடன் உதவிக்கு போனான்.
ஆனால் அந்த இயக்குனரோ நடிகர் நடிகைகளை நம்பாமல் மிருகங்களை வைத்து படம் எடுத்துக் கொண்டிருந்தார். அவரது எல்லா படத்தின் கதைகளும் ஒரே மாதிரியாக இருந்தது .என்றாலும் தன்னால் முடிந்த வரை சகித்துக்கொண்டு அவரிடம் வேலை செய்து பார்த்தான். மாயாண்டி உளமார வேலை செய்தான் .
குழந்தை நட்சத்திரங்களையும் மிருகங்களையும் வைத்து அந்த இயக்குனர் படமெடுக்க, எல்லா படங்களிலும் அர்ப்பணிப்போடு வேலை செய்தான். அந்த இயக்குனர் மாதக் கணக்கில் சம்பளம் தராமல் ஏமாற்றினாலும். அவரிடம் மிக மரியாதையாக நடந்து கொண்டான்.
அவர் தான் ஒருமுறை “என்னடா பேர் அது மாயாண்டி ? அதெல்லாம் சினிமால வெச்சா சிரிச்சிடுவாங்கடா . அது மட்டும் இல்ல, நீ யாரு? எங்கிருந்து வந்தே?ன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிடும் .”
“.. சார்”
“ நீ என்ன பண்றே. முதல்ல பேரு மாத்திக்கோ, “ என சொல்லி “இங்கே பாரதிராஜா சக்க போடு போடுகிறார். நீ செல்வராஜ்ஜுனு பேர் வச்சுக்கோ. அவரை மிஞ்சுற அளவுக்கு படத்த கொடு. அவரை மாதிரியே கிராமத்தையே மண் வாசனையோட படத்தை எடு “என அவர் சொல்ல,
அவன் ‘ என் ராசாத்தி ’ என்கிற ஒரு டைட்டிலோடு கதையை தயார் செய்து அந்த பேர்
வைத்த இயக்குனரிடம் சொல்ல
“அட, நான் பேரை வைச்ச உடனே, கதையை ரெடி பண்ணிட்டியே. எங்கே கதையை சொல்லு” என்றார்.
ஒரு மதிய நேரத்து பிற்பகலில் மர நிழலின்ன் கீழே உணவு
இடைவேளையில் அவன் கதையை விலாவரியாக சொல்லி முடித்தான்.
“ என்னடா தம்பி கதையில ஹீரோ குடிகாரன், ரவுடி , காட்டான். எப்ப பார்த்தாலும் சாராயம் குடிக்கிறவன் அப்படின்னு எழுதி வச்சி இருக்கே..?”
“சார்?”
“ போதாக்குறைக்கு ஹீரோ தன்னை பிடிக்காத பொண்ணை, அதாவது ஹீரோயினை ரேப் வேற பண்ணிடறான்.. இது நம்ம ஜனங்களுக்கு
புடிக்குமா? ஹீரோயினை ரேப் பண்ண படம்
எதுவும் ஓடனதுல்ல தம்பி.. “
“ஸார்’
“ஆனா
பின்னாடி எல்லாத்தையும் அட்ஜஸ்ட் பண்னிடறே ஓகே. தான். .ஹீரோ எல்லா பொண்ணுங்களையும்
தாயின்னு கூப்பிடறப்ப., அவன் தப்பானவன் இல்லன்னு புரியுது. ஆனா ஹீரோவோட தனிப்பட்ட
கேரக்டர் இப்படி மோசமா இருந்தா எந்த ஹீரோடா உன் கதையில் நடிக்க ஒத்துக்குவான்? “
“ஸார்”
“உன் கூடவே இருக்கானே தணிகா. அவனை
நடிக்க சொல்லு பாப்போம்..”
“ இல்ல சார்.. நான் இந்த
படத்துக்கு பத்து ஆளை அடிக்கிற உடம்பு இருக்குற ஹீரோ மாதிரி பாக்குறேன் சார்” அவன்
சில ஹீரோக்களின் பேரை சொல்ல.,
‘செல்வராஜா.. இங்க ஹீரோன்னா வெள்ளையா, நல்லவனா இருக்கணும்...”
“ இல்ல சார். இது
யதார்த்தம். பிராக்டிக்கல், இனிமேல் இது டிரண்டாகும் சார். ஹீரோ எதார்த்தமாய் இருக்கிறவன். அப்படின்னு ஆடியன்ஸை புரிஞ்சுபாங்க .”
‘இதுல எதார்த்தம் எங்கடா இருக்கு? ஹீரோ கெட்டவனாக இல்ல காட்டுற?”
“ இல்ல சார்., இனிமேல சினிமால வில்லன் செய்ற வேலையெல்லாம் ஹீரோ செய்வான் சார். பணத்தை திருடி ரூபாய் கொள்ளை அடிக்கிறவன், தண்ணி அடிக்கிறவன்,
ரௌடி, கற்பழிச்சவன்., இவனையெல்லாம் ஜனங்க கொண்டாட போறாங்கன்னு தோணுது ., ”
முப்பது வருடத்திற்கு முன்பு செல்வராஜா தனது குருநாதரிடம் இப்படித்தான் கதையை சொன்னான்.
“அட உங்கிட்ட விவாதம்
பண்னி உன் கான்பிடன்ட் லெவலை குறைக்க விரும்பலப்பா.. கதை நல்லா தான் இருக்கு., பொண்டாட்டி மேல ரொம்ப பாசம் வைத்திருக்கான். அம்மா மேலயும் பாசம் வைத்திருக்கிறான். அதெல்லாம் ஓகே.. அந்த சென்டிமென்ட் சீன் எல்லாம் ஒர்க் அவுட் ஆகும். ஆனா ஹீரோ குடிகாரனாக, ரவுடியா இருக்காணே. யாரு நடிப்பாங்கன்னு தான் யோசிக்கிறேன் “என சொன்னார் .
“இல்ல சார்.
இது தான் கதை. “ அவன் திடமாக நின்றான்.
“ ம்கூம்.. ஏதாச்சும் கதைய மாத்திட்டு வா. நான் ஒரு புரட்யூசரை பார்க்க சொல்றேன்” என்றார்
ஆனால், ஒரு வாரம் கழித்தும் அவனால் அந்த கதையை மாற்ற முடியவில்லை. அது அவன் மனதில் இருந்த கதை. பல ஆண்டுகளாக கேள்விப்பட்ட கதை . அவன் பிறப்பதற்கு முன்பே அந்த கிராமத்தில் நடந்த கதை . அதில் எந்த பாத்திரத்தை அதன் குணாதிசயத்தை எப்படி மாற்றுவது? என அவனால் யோசிக்க முடியவில்லை
ஓரிரு காமெடி சீன்களை மட்டும் சேர்த்துக் கொண்டு, மறுபடியும் போனான்.
“ அப்ப நீ கதையை மாத்த மாட்டேங்குற., உறுதியா நிக்கிற. சரி வா ஒரு இடம் போவோம்” என அவனது குருநாதர் தனக்கு தெரிந்த ஒரு தயாரிப்பாளரிடம் அவனை அனுப்பி வைத்தார்.
அந்த தயாரிப்பாளர் தமிழ் திரை உலகின் மிகப்பெரிய விநியோகஸ்தர் ஆகவும் இருந்தார் .
“ஒரு கதையை கேட்ட மாத்திரத்திலேயே இந்த படம் ஓடுமா ஓடாதா? என சொல்லக்கூடிய தேர்ச்சி பெற்ற அனுபவம் வாய்ந்தவராகவும் இருந்தார்.
அவருக்கு இந்த கதை பிடித்து விட்டிருந்தது .
“ இந்த கதைக்கு ஹீரோவா முன்னணி ஆளுங்க நடிக்க மாட்டாங்க .ஒரு காலத்துல ஹீரோவா இருந்து இப்போ மார்க்கெட் போன ஆளுங்க தான் நடிப்பாங்க” என சொல்லி அவர் பல நடுத்தர வயது ஹீரோக்களை அணுகினார்.
எல்லோருமே படத்தில் குடிக்க பயந்தார்கள். நிஜத்தில் 6 மணிக்கு மேல் சதா தண்ணியில் இருக்கக்கூடிய சாதாரண மனிதர்கள் தான் அவர்கள் . ஆனால், திரையில் குடிப்பது என்பது தன்னுடைய இமேஜுக்கு கேடு’ என நினைத்தார்கள்
அடுத்த மூன்று மாத காலம் அப்படியே ஓடிப் போனது என்ன செய்வது என தெரியவில்லை
செல்வராஜா தனது குருநாதரிடம் புது படத்தில் வேலைக்கு போன போது,” இனிமேல் உனக்கு இங்கே சரிப்பட்டு வராது செல்வராஜ்.”
“ ஏன் சார்?”
“எப்போ உனக்குன்னு ஒரு கதையை நல்ல உருவாக்கிட்டியோ, இனி அதை டெவலப் பண்ண தான் உனக்கு மனசு போகுமே தவிர , என்னுடைய சினிமா பத்தி யோசிக்க மாட்டே”
“ அய்யோ சார் அப்படி சொல்லாதீங்க சார் “
“ச்சே சே..
அது அப்படித்தான் செல்வராஜா . அது தான் சரி. இதுல உன் தப்பு எதுவும் இல்லை. நானும் அப்படித்தான் இருந்தேன் .என் கிட்ட இருந்து வேலை பார்த்துட்டு போன ஆட்களும் அப்படித்தான் இருக்கிறாங்க.. சினிமாவில் இது கொஞ்சம் கூட தப்பே இல்லை ., அதுக்காக உன் மேல் நானே பொறாமை பட மாட்டேன். அப்படி பொறாமை பட்டா நானே சரியான ஆளு கிடையாது”
“ ஐயோ சார்., எனக்கு படம் ஒன்னும் கமிட்டாகவில்லை அதுவரைக்கும் உங்க கூட வேலை செய்றேன்”
“ இல்ல செல்வராஜா தனக்கு ஒரு குழந்தை பிறந்த பிறகு, மூத்த சம்சாரம் பெத்த குழந்தையை எந்த வித்தியாசமும் இல்லாம பார்த்துக்க
முடியுமா? அந்த மாதிரி தான் இதுவும் . நீ ராஜாவா போ. உனக்காக வேண்டிக்கறேன்.
“
‘................சரி .வரேன்
சார்.” அவன் கும்பிட்டு போக.,
“இரு உனக்கு நான் தரவேண்டிய பணம் கொஞ்சம் இருக்கு. அந்த பேமெண்ட் செட்டில் பண்றேன். அதை வாங்க்கிக்க. “
“சரிங்கசார்”
“ நீ இங்க வா போ. ஆனால் என் டீம்ல நீ இருக்க முடியாது .அப்படி இருந்தா உனக்கு இங்கேயும் மரியாதை இருக்காது. இவன் ஒரு போனி ஆவாத டைரக்டர், அப்படின்னு முத்திரை குத்திடுவாங்க. அது உனக்கு தான் பிரச்சனை “ என சொல்லி ஐயாயிரத்து சொச்சம் ரூபாய் கையில் திணித்தார் .
No comments:
Post a Comment