மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, September 7, 2023

அனுமதிக்கப்பட்ட துரோகங்கள் : பாகம் 34 – எபிசோடு எண் : 7

 

ஒரு நீண்ட தெருவின் கடைசி முனையில் இருக்கும் தன் பள்ளிக்கு ஆட்டோவில் தன் பெரியப்பாவுடன் போய் இறங்கினான் சிவா.

மனம் முழுக்க சந்தோஷம் நிரம்பி வழிந்தது., இந்த காட்சியை அப்பா பார்க்கவில்லையே. அழைத்த போது மறுத்துவிட்டார்.

“ஏய்ய் அவன் தான் உனக்கு அப்பன். ..போடா.. அவன் உன் மேல வச்ச நம்பிக்கைக்கு நீ தர மரியாதை உன் பெரியப்பனை கூட்டி போறது தான்.. அவன் கூட போ. நான் எதுக்கு அங்க?,

“அப்ப நீ?

“ நான் காட்டான்.. கிராமத்தான்.,  போடா …உன்னை அவன் தான் எங்கிட்ட இருந்து காப்பாத்துனான். இல்ல சேறு, வைக்கபோரு அதான் பாத்திருப்பே.. போ.. நானும் உன் கூட வந்து அவன் சந்தோஷத்தை பங்கு போட்டா அது பெரிய துரோகம்.. நீ போ  நான் டிவில பாத்துக்கறேன்

படிக்காத தன் தந்தை வாழ்க்கையின் உன்னததை புரிய வைத்து விட்டார்., எவன் உழைப்பையும் வாங்கி கொள்ளாத விவசாயியாக அவர் இருந்தார்.

வீதி முழுக்க மக்கள், மாணவர்கள்., பெரிய கூட்டம் அவனை பார்த்ததுமே கூட்டம் கை தட்டி ஆராவரித்தது..

‘ வருவோர் போவோர் எல்லாம் கை கொடுத்தார்கள்.

முகம் தெரியாதவர்கள் கூட அணைத்து கொன்டார்கள்.

“கவர்மென்ட் ஸ்கூலுக்கு ஒரு நல்ல பேரை வாங்க்கி கொடுத்துட்டேப்பா

படிக்கிற பையன் எங்க இருந்தாலும் படிப்பான்பா

இந்த காலத்துல இந்த ஸ்கூல்ல இப்படி ஒரு புள்ளையா?

பல பல பாரட்டுகள். பள்ளியில் தான் விழா.. கலெக்டர் வந்து கொண்டிருக்கிறார். அய்யோ இது தான் என் வாழ்க்கையின் உச்ச கட்ட சந்தோஷமான நாள். அவன் பள்ளி அருகே வர.,மாணவர்கள் அவனை தூக்கி கொண்டு ஆட.,

அவன் அங்குமிங்க்கும் பார்த்தான். தேடினான்.

“யாரைடா தேடுறே?

ஸா..ர்.ர்

“கலக்டரையா?

“இ…இல்ல கணபதி சாரை..

“அவரு ஹாஸ்பிடல்ல இருக்கார்…

“அய்யோ..என்னாச்சு

“அவருக்கு ஒன்னுமில்ல., அவரு பொண்னு பூச்சி மருந்தை குடிச்சிடுச்சாம்

“ஏ….ய். என்னடா சொல்றிங்க?

விழா முடிந்ததும் அவன் பெரியப்பாவை ஆட்டோவில் ஏற்றி அனுப்பி விட்டு, நேராக மருத்துவ மனைக்கு போனான்.

பெட்டில் அலங்கோலமாய் படுத்திருந்தாள் மிருதுளா.

 

“அய்யோ என்னாச்சு மிருதுளா?”

அவள் முகம் திருப்பி கொண்டாள்.

“ நீ என்ன ஃபெயிலா ஆகிட்டே.. மார்க் கொஞ்சம் குறைச்சல் அவ்வளவு தானே., “ அவனது  ஆறுதல் அவளுக்கு பிடிக்கவில்லைல்.

“நீயெல்லாம் எப்படிடா பர்ஸ்ட் வந்தே? என்றுதான் மனதில் கறுவினாள்.

அவள் அவனுக்கு வாழ்த்து சொல்லாதது அவனுக்கு உறுத்தலாக இருக்க., மெல்ல ரூமை விட்டு வந்தான்.

அவன் கொஞ்ச  நாள் மிருதுளாவையே நினைத்து கொண்டிருந்தான். நல்ல பெண். அழகி. பாவம் அவளது அப்பாதான் அவளை வறுத்தெடுத்து விட்டார். தானாக விட்டிருந்தால் கூட அவள் மாவட்டத்தில் முதல் பத்தில் வந்திருப்பாள்.

சரி அவள் கதை நமக்கெதற்கு ? நாம் ஆக வேண்டியதை பார்ப்போம்.

பன்னிரண்டாம் வகுப்புக்கு பிறகு என்ன படிப்பது?  என யோசித்தபோது, வாத்தியார்கள் அவனை ஊக்குவித்து,

கணக்குப் படி சிவா.  கணக்கு தெரிஞ்சவன் இங்க ரொம்ப கம்மி , கணக்கு மிகப்பெரிய கடல்

என்ன சார் அவனவன் இன்ஜினியரிங், டாக்டர், ஐடின்னு யோசிக்கிறாங்க, சி ஏ படின்னு எங்க பெரியப்பா கூடச் சொல்றாருஎன சொல்ல

அந்த மாதிரி படிக்கிறவங்க ஆயிரக்கணக்கில் இருக்கிறாங்க.., நீ கணக்குப் படி

கணக்குல என்ன சார் இருக்கு ?“

தப்பு. இதை 200க்கு 200 வாங்குன நீ கேக்ககூடாது. என்ன நீ அப்படி கேட்டுட்ட.. சிவா இந்த கேள்வியை கேட்டிருக்க கூடாது

‘இல்ல சார் தெரிஞ்சுக்கலாமுன்னு தான்

கணிதம் தான் உலகம். கணிதம் தான் எல்லாம். பால்வீதியில் எத்தனை கோள்கள் ஒன்றையொன்று தொட்டுக் கொள்ளாமல் சீரான இடைவெளியில் சுற்றி வருதே. அதுக்கு  கணித அறிவியல் தான் காரணம்.  தஞ்சை கோயில் அத்தனை கம்பீரமாக ஆயிரம் ஆண்டு காலம் இன்னும் அச்சுப்பிசகாமல் நின்னுகிட்டு இருக்கறதுக்கு. நின்று கணிதம் தான் காரணம். கணக்கு வழி இல்ல சிவா. அது ஒரு மொழி.. உலக பொது மொழி..

‘………………”

தமிழில் கணிதம்  இருக்கு. உனக்கு கணிதத்தின் மீது ஆர்வம் இருக்கிறது. உன் கணிதம் உனது வாழ்க்கைக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும்.  நீ சொன்ன இன்ஜினியரிங் ,ஏரோநாட்டிக் எல்லாத்துக்கும் கணிதம் தான் அடிப்படை. கணக்கு இல்லாமல் இங்கே பயிரையும் வைக்க முடியாது, வானத்துல ராக்கெட் டையும் செலுத்த முடியாது, தயவுசெய்து கணக்கை ஆழமாக படி..

அப்படிங்களா சார்

ஆமாம் நீ பி.எஸ்.சி.,  எம்.எஸ்.சி அப்படின்னு போய்கிட்டே இரு .ஒரு டியூஷன் சென்டர் வச்சா கூட. மாதம் 50 ஆயிரம் சம்பாதிக்கலாம். நீ பெரிய ப்ரொபசர் ஆயிட்டா என்ன விட அதிகம் சம்பாதிக்கலாம்.,பலபல விஞ்சானிகளை நீ உருவாக்கலாம்

 

அந்த வாத்தியார் சொன்னது போல பெரிதாக  சம்பாதிப்பதற்காக மட்டுமில்லாமல், தான் கணிதத்தின் மீது கொண்ட காதலை துறக்க முடியாமல் அவன், மிருதுளா படிக்கும் அதே கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் விண்ணப்பித்தான்.

அந்த கல்லூரி ஆண்களும் பெண்களும் படிக்கிற கல்லூரி. அங்கு எல்லோருமே சுமாராக படித்தவர்கள் தான் நிறைந்திருந்தார்கள். பெண்களை கவர்வதற்கு ஆண்களும், ஆண்களை கவர்வதற்காக பெண்களும் அந்த கல்லூரிக்கு வந்து போவது போல இருந்தது.

 

ஆனால் இவனை யாருமே கவரவில்லை, கணிதம் தான் கவர்ந்தது சுற்றிலும் நவநாகரிக உடை அணிந்த மாணவர்கள் சூழ்ந்திருக்க இவன் மட்டும் சாயம் போன பேண்டும், ஒரு பழைய சட்டையும் அணிந்து கொண்டிருந்தான்.

அணியும்  உடையில் வறுமை இருந்தாலும், படிப்பு தனது பொலிவிலும், வசீகரத்திலும் அவன் தனித்து தான் தெரிந்தான்.

அவனிடம் எந்த வித கெட்டப் பழக்கங்களும் இல்லை என்பதால் அவனுக்கு இயற்கையால் கொடுக்கப்பட்டிருந்த இளமைக்கு அவன் எந்தவித துரோகமும் செய்யாமல் இருந்ததால்,  அவன் பார்ப்பதற்கு கிராமத்து ஹீரோ போல இருந்தான்.

யாருடைய மனதில் தெளிவு இருக்கிறதோ தான் செய்ய வேண்டிய பணி எது?  என இலகின் மீது தீர்மானமாய் இருக்கிறானோ அவனுக்கு முகம் தெளிவாக இருக்கும்.

 

அவ்வளவு பெரிய கல்லூரியில் ஒரு ரூபாய் கூட கட்டணம் செலுத்தாமல் பள்ளி தலைமையாசிரியர் சொந்த சிபாரிசில்., அவனுக்கு அந்த கல்லூரியில் சீட்டு கிடைத்திருந்தது.

மாவட்டத்தின் முதல் மாணவன், அதனாலேயே அவனுக்கு அங்கு மிகப்பெரிய மரியாதை இருந்தது. ராகிங், வம்பு, வழக்கில் ஏதும் மாட்டாமல் இருந்தான்.

பணக்கார பையன்கள், ரவுடி மாணவர்கள் நிறைந்த அந்த கல்லூரியில், ஆரம்பத்தில் அவனை ஒரு வேண்டாத ஆள் விரும்பப்படாத ஆள் என ஒதுக்கி வைத்தாலும்

பிஎஸ்சி, முதல் செம்ஸ்ற்ற வரை  அவனை யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனால், அந்த  முதல் செமஸ்டரில் அவனை யாரும் நெருங்கமுடியாத அளவிற்கு அவன் மதிப்பெண்  எடுத்து காட்டினான்.

மூன்றாம் ஆண்டு இறுதியில் ஒட்டுமொத்த யூனிவர்சிட்டியில் முதல் மதிப்பெண் எடுத்து தங்கம் வெல்லப் போகிறவனாக அவன் கணிக்கப்பட்டான். கல்லூரி நிர்வாகம் அவன் மீது விசேஷ கவனம் செலுத்தியது.

அந்தக் கல்லூரியில், அவனை கொண்டாடாத ஆளே இல்லை. அவனிடம் பேசுவதற்கும், நட்பு வைத்துக் கொள்வதற்கும் நிறைய பேர் விருப்பப்பட்டார்கள்.  

எப்படிப்பட்ட புகழும் கடுமையான உழைப்பிற்கு பின்னால்தான் கிடைக்கும். அவனுக்கும் அது கிடைத்தது. ஆனால் அதே புகழ் தான் அவனுக்கு பல எதிரிகளை கொண்டு வந்தது. வீட்டைச் சுற்றிலும் கல்லூரியிலும் அவனுக்கு ஆங்காங்கே எதிரிகள் முளைப்பார்கள். அவனைப்போல உழைக்க ஆசைப்படாத மிகப் பெரிய கூட்டம் அங்கே இருந்தது.

அவன் ஒரே நேரத்தில் பல பேரின் ஆச்சரியத்தையும் நட்பையும் பெற்ற நேரத்தில் வெறுப்பையும் தனக்கே தெரியாமல் சம்பாதித்துக் கொண்டிருந்தான்.

 பிஎஸ்சி யில் யூனிவர்சிட்டி கோல்ட் மெடல் என்னும் அற்ப இலக்கை நோக்கி அவன் படித்துக் கொண்டிருந்த போது தான் அவனது கல்விப் பயணத்தில் மிகப்பெரிய குழப்பம் வந்தது. கொண்டு வந்தவள் மிருதுளா.


கடைசி  செமஸ்டருக்கு மிருதுளா தயராகிக் கொண்டிருக்க.,

“இனிமே உனக்கு படிப்பெல்லாம் ஏறாது மிருதுளா. போய் கல்யாணம் பண்னிகிட்டு புள்ளைய பெத்துக்க” தோழிகளில் ஒருத்தி தாரிணி கிண்டல் செய்ய.,
“செருப்பால அடிப்பேன். என்  நாலு செமஸ்டர் மார்க் பாத்தே இல்ல..?”

“அதுக்காக?”

“என்  கிளாஸ்லயே டிஸ்ட்ரிக்ட் நாலு, அஞ்சு பிளேஸ்ல வந்தவங்க எல்லாரையும் அடிச்சி ஓரங்கட்டிட்டேன்…”

“அப்படியா., அப்ப சிவாவை ஓரங்கட்டேன் பாப்போம்”

“………………” அவள் மௌனமாக இருந்தாள்

“இங்க பாருடி..பையன் கற்பூரமா இருக்கான்.. அவன் இருக்கற வரைக்கும் யூனிவர்சிட்டி இல்ல., காலேஜ்ல கூட  நீ பர்ஸ்ட் டைம் வர முடியாது.. அவன் மார்க் எங்கே ..நீ எங்கே? “

“……………………..”

“  அட்வான்ஸ்ட் கால்குலஸ்,  வெக்டர் அனாலிஸ் இதுல அவன் சென்டம்..அடிச்சி பின்னிட்டான்,  நீ அவனுக்கு கீழே ”

“,……………….”

“அதாவது அவன் காலுக்கு கீழே”

“ஷட் அப்….” மிருதுளா கத்த,

“வேணுமுன்னா ஒன்னு பண்ணலாம்” தாரிணி சொன்னாள்.

“என்ன?’

“அதை நான் சொல்ல மாட்டேன்பா..” அப்பெண் ஓடிவிட்டாள்.

“வேணுமுன்னா ஒன்னு பண்ணலாம்”

“வேணுமுன்னா ஒன்னு பண்ணலாம்”

“வேணுமுன்னா ஒன்னு பண்ணலாம்”

மிருதுளா அவள் சொன்னதையே யோசித்தாள். என்ன சொல்ல வந்தாள். என்ன செய்யலாம். நான் ஒரு பெண் அவனை போய்….

அவளுக்கு பொறி தட்டியது.

ஓ.. அவனை காதல் சொல்லி கவிழ்த்தால்? காதலா காமமா? ரெண்டும் தான். ஏற்பானா? ஏற்காமல் எங்கு  போகப் போகிறான்?

இப்படி வெண்ணெய் கட்டியாய் ஒரு பெண் காட்டி கொண்டு நின்றால்., தின்னாமலா போவான்?

அவளுக்கு நடுக்கமாய் இருந்தது..

ச்சே அவன் நல்ல பையன்..

அப்ப நான் நல்ல பெண்ணில்லையா? என்னை சுலபமாய் தோற்கடித்து எங்கள் குடும்பத்துக்கு அவப் பெயர் தேடி தந்து விட்டானே.. அவனை படிபிலிருந்து விலக்கி வைக்க இதான் சரி..

அவள் அடுத்த நாடகத்துக்கு தயரானாள்.


பாகம் 34 ஐ இப்போதே முழுதும் படிக்க : 

650 பக்கங்கள்