ஒரு வாரம் கழித்து , நளினி தான் போன் செய்தாள்.
“என்னக்கா ஹெல்த் பரவாயில்லையா? என்ன யோசிச்சி வச்சிருக்கே?”
என்றாள். மதுமிதா மௌனமாக இருந்தாள்
“ இங்க பாரு! நான் திரும்பத் திரும்ப சொல்றேன். எனக்கு
பணம் வேணும் என்றதுக்காக இதை நான் சொல்லல. இதுதான் பெஸ்ட் ஐடியா. வேணும்னா உங்க வீட்டுக்காரர்
கூட படுத்து நான் புள்ள பெத்து தரேன். ஆனா இத ஃப்ரீயா என்னால செய்ய முடியாது நான் என்
உடம்பையும் கருப்பையும் கொடுக்கறதுக்கு கண்டிப்பா 3 லட்சமாச்சும் பணம் வேணும். ஒரு
பக்கம் கடன் ஜாஸ்தி ஆச்சு. வாங்கற பதிணேழாரம் ரூபா சம்பளத்துல இங்க எதுவும் பண்ண முடியல..”
......................”
“ .. அப்படி இல்லன்னா இதப் பத்தி பேச வேண்டாம். உனக்கு
பணம் ஒரு பணம் புரட்ட முடியல. அப்படின்னா ஒரு பிரச்சினை கிடையாது அந்த பணத்தை கூட நீ
இப்ப கொடுக்க வேண்டாம். குழந்தைய பெத்து கையில கொடுத்தா போதும் .”
“சே..சே அதுக்கில்ல.,. உன் குழந்தையை என் குழந்தைன்னு”
“ அதான் சொன்னேணே!. என் கருப்பையில வச்சி வளர்த்து
கொடுத்தாலும் அதானே அர்த்தம். சரி ஒரு வேளை என் கலர்., அழகு உனக்கு சுமாரா தோணுச்சின்னா.,
ஷில்பா மாதிரி செவத்த பொண்ணா பாரு”
“ஏய்ய் அதுக்கு சொல்லலடி”
‘ நான் இல்லன்னா
நீ ஷில்பா கிட்ட போறது பெட்டர். ஷில்பா எதாச்சும் போன் பண்ணாளா?”
“ அவ ஏதும் பண்ணல”
“ என்னக்கா இது? ஒரே அப்பார்ட்மெண்ட்ல இருந்துகிட்டு
நேர்ல கூட நீ பாக்கலையா?”
“ பாக்கல. நீ அவளை அந்த மாதிரி கேட்டு இருக்க கூடாது.
கருமுட்டைன்னா கூட ஓகே. வாடகை தாய்னா கூட ஓகே... ஆனா ”
“ இதுல என்னக்கா தப்பு இருக்கு?கண்னை மூடிட்டு ஒரு
அஞ்சு நிமிசம் படுத்தா போதும்”
“ச் சீ... தப்பா பேசுறே?”
“ஆனா 7 லட்சம் மிச்சமாவுதுலே.. “
“அய்யோ ஒரே அப்பார்ட்மெண்ட்ல இருந்துட்டு., என்ன பேசுறே நீ? கருமுட்டை தானமாக கொடுக்கறது வேற, கட்டில் வந்து
படுக்குறதுக்கு வேற. நீ சொல்றது தப்பு நளினி”
“அந்த பக்கம் சயிண்ஸ்., இந்த பக்கம் செக்ஸ் அதாணே
வித்தியாசம்.. சயிண்ஸிலருந்து இந்த பக்கம் வந்தா 7 லட்சம் மிச்சம். யோசி“
“......................................”
“இன்னொரு விஷயம் சொல்றேன். திரும்ப கருமுட்டை தனியா
விந்தணு தனியா எடுத்து டெஸ்ட் ட்யூபில் வைச்சி, அதை 40 நாள் பாதுகாத்து மறுபடியும்
கருப்பையில வைச்சா கரு ஆகறதுக்கு 50% சான்ஸ் இருக்குது 50% பெயிலியரும் ஆகும். திரும்ப
காசும் செலவாகும். இருக்கப்பட்டவங்க செய்யலாம். நமக்கு?”
“.......................... அதுக்காக?”
“இதை மத்தவங்களுக்கு சொல்லமாட்டேன். நீ தெரிஞ்சவங்க’ங்க்கிறதால
சொல்றேன்கா. ஒன்னு என்னையாச்சும் யூஸ் பண்ணிக்கோ
அப்படி இல்லன்னா ஷில்பாவையாச்சும் யூஸ் பண்ணிக்கோ. ஷில்பாவுக்குன்னா குழந்தை அழகா பிறக்கும்.”
“.....................”
“அக்கா ரொம்ப யோசிக்காதீங்க. மனசு இருந்தால் மார்க்கம்
உண்டு. உங்களுக்கும் அவங்களுக்கும் ஓகேன்னா, தீனா அண்ணா கிட்ட பேசுங்க. அவங்கள நீங்க
தனியா கூட விட வேணாம். நீ கூடவே கூட இருக்கலாம். டிரஸ்ஸை கூட கழட்ட வேண்டாம். நமக்கு
ஒரே தேவை என்ன ? இங்க இருக்குற சமாச்சாரம் அங்க போய் சேரனும். அவ்வளவுதான். நல்லா யோசிச்சு
பாரு”
“ஆனா ஷில்பாவை....” மதுமிதா இழுத்தாள்.
“ஷில்பாவை கன்வின்ஸ் பண்ண வேண்டியது உன் பொறுப்பு.,
யோசிச்சி சொல்லு. எனக்கு பிரச்சனை இல்ல. ரெண்டு வருஷம் வரைக்கும் வீட்டுக்காரர் வரமாட்டார்
ஆனா, ஷில்பாக்கு எப்படின்னு தெரியல. கேட்டுக்கோ. ஷில்பா பக்கம் போறேண்னா சொல்லு, நான்
கிட்ட இருந்து மெடிக்கல்ஸ் சைடுல ஹெல்ப் பண்ணி குழந்தை பெத்துக்கற வரைக்கும் கூட இருந்து
ஹெல்ப பண்றேன். எனக்கு ஒரு லட்சம் கொடு போதும். யோசி.. ஆனா லேட் பண்ணிடாதே!” என்ன சொல்லி
ஃபோனை வைக்க மதுமிதா அயர்ந்து போனாள்.
நளினி மெடிக்கல் லைனில் இருப்பவள். அதான் பொசுக்கென
பேசுகிறாள். இன்னொரு குடும்ப பெண்ணை தீனா கூட படுக்க சொல்கிறாள். இது சரியான முறையா?
இது எத்தனை பேர் சம்பந்தப்பட்ட விஷயம்? இதை இவ்வளவு
ஈசியாக சொல்லி சொல்லிவிட்டாளே? இது லீகலான சரியான முறையா? இது குடும்பப் பெண்களுக்கு
தகுமா? ஷில்பா ஒரு ட்ரெடிஷனல் ஃபேமிலி காரி. கணவன் தான் வீட்டில் இல்லையே தவிர, மாமனார்
மாமியாருடன் இருக்கிறாள். வாரம் ஒரு முறை வீக்கெண்டில் வந்து போகும் மச்சினன் மட்டும்
இப்போது இல்லை. ஃபாரின் போய் படிக்கிறான்.
இதற்கு நடுவில் அவள் பிள்ளையை பெற்று வயிற்றை நிரப்பி
யாருக்கும் தெரியாமல் எனக்கு பிள்ளை பெற்றுக் கொடுப்பார் என்பதெல்லாம் எப்படி நடக்கும்?
இதெல்லாம் நடக்கிற கதையா? எல்லாவற்றையும் கூட பொறுத்துக் கொள்ளலாம்.’ வந்து என் புருஷன்
கூட படு’ என மனைவியான நானே எப்படி சொல்ல முடியும்? எப்படிப்பட்ட வெட்கக்கேடு? யாருக்காவது தெரிந்தால் அசிங்கமாய் காரி மூஞ்சில்தான்
துப்புவார்கள்.
எனக்கு பிள்ளை வேணும் என்பதற்காக, எனது மலடிப்பட்டம்
போக வேண்டும் என்பதற்காக, யாரோ ஒரு பெண்ணை கொண்டு வந்து என் வீட்டில் படுக்க வைக்க என்னால் முடியாது. அதை
விட பெரிய தலைவலி, நான் கர்ப்பஸ்திரி மாதிரி
கபட நாடகம் ஆடிக் கொன்டிருக்க முடியாது. அதுவும் பத்து மாதம்...
இந்த நளினி பொல்லாத வாய்க்காரி. இந்த விஷயத்தை நாசூக்காக
கூட சொல்லவில்லை. ஷில்பாவின் எதிரியே சொல்லி பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி விட்டாள்.
என்னுடைய கணவரின் விந்தணுவை அவள் வாங்கிக் கொள்ள தயாராக இருந்தாள் என்பதே பெரிய விஷயம்
.
ஆனால், எல்லாவற்றையும் விட்டு, அவர் கூட பெட்ல படு’
என சொன்னது எவ்வளவு பெரிய தப்பு? என்னால் இதை எப்படி சொல்ல முடியும்? ஷில்பா இந்த ஒரு
வாரமாக என்னிடம் பேசவில்லை.
அவளுக்கும் இந்த கோபம் கண்டிப்பாக இருக்க தானே செய்யும்?
இதற்காகவது எப்பவாவது போய் ‘சாரி’ கேட்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தாள் இன்னும்
கூட ஒரு வாரம் போனது. ஆனால் ஷில்பா மதுமிதாவின் வீட்டிற்கும் வரவில்லை . ஜிம்மிலும்
பார்க்க முடியவில்லை.
இரண்டு வாரங்களுக்கு கழித்து மொட்டை மாடியில் தான்
அவளை பார்த்தாள். துணியை எடுத்துக் கொண்டு விறு விறு என போகும் ஷில்பாவின் கை மடக்கி
நிறுத்தினாள்.
“ஏ ஷில்பா இப்ப எதுக்கு என்கிட்ட பேசாம போற? நான் என்ன தப்பு பண்ணேண்?”
‘...........”
“ நளினி சொன்னதுக்கு நான் என்ன பண்ணுவேன்? அப்படி அவ தப்பா கேட்டு இருந்தா சாரி சாரி “ என சொல்ல,
“ கையை விடு.. நீ என்ன பிரண்டா நினைக்கல. யாரோ ஒருத்தியாத்தான்
நினைச்சே?”
“ என்ன என்னடி சொல்ற?”
“அவ திடீர்னு இங்கிதமில்லாம கேட்டப்ப நான் எப்படி
துடிச்சிட்டேன் தெரியுமா?’
‘..........சாரிடி”
“ போ.. அவ கூடவே போ...அவளையே உனக்கு புள்ளை பெத்து
கொடுக்க சொல்லு.,”
“அய்யோ சாரிடி”
‘நீ கூப்டப்பல்லாம் உன் கூட வந்தேன்..கருமுட்டை கொடுத்தேன்ல எனக்கு இதுவும் வேணும்
இன்னும் வேணும்”
“சாரிடி... அவ அப்படி கேட்டிருக்க கூடாது. அவளுக்கு
ஏதோ காசு வேனும்னு இப்ப சொல்லிட்டா. பிரண்டா என்னை மன்னிச்சிடு.. என் தலையெழுத்து என்னவோ
அப்படியே ஆகட்டும். “
“நீ பிரண்டா நினைச்சிருந்தா கண்டிப்பா நீயே அதை என்கிட்ட
வந்து கேட்டு இருக்கலாம்”
“என்னது?” மதுமிதா திகைத்தாள்.
“இப்படி இன்னொரு பொண்ணு கிட்ட சொல்லி என்னை கேட்டு
இருக்க கூடாது “
“ஏய்ய் வாய மூடு., நானா கேட்டேன்? அவ கண்டிப்பாக
இப்படி கேப்பான்னு எனக்கே தெரியாதுடி..”
‘ நீயே என்ன கேட்டிருக்கலாம். நான் பதில் சொல்லி இருப்பேன். அவ யாரு நடுவுல”
‘ஏய்ய் அவ கேட்கிறதுகு நான் என்னடி பண்றது? “
“உன் புருஷன் கூட படு அப்படின்னு அவதான் ஆர்டர் பண்றாளே?"
“அடிவாங்குவே நீ”
“ இயற்கையான முறையில கருத்தரிப்பு செஞ்சுக்கணும்கிறது
சரிதான் ஆனா...”
“ , அப்போன்னா அது சரின்னு சொல்றியா ஷில்பா”
“ சரியா தப்பா என்று தெரியாது. ஆனால் உனக்காக நான்
எதையும் செய்வேன்?”
“ அது தெரியும்டி .ஆனா அதுக்காக என் புருஷன் கூட படு
என்று உன்னை எப்படி நான் வந்து கூப்பிட முடியும்”
‘ சரி ஏழு லட்ச ரூபா பணம் கொடுத்து செலவு பண்ணிக்க,.
இல்லண்ணா., அவள கூப்ட்டு அவ கால்ல விழுந்து
என் குடும்பத்துக்கு புள்ளை பெத்து தான்னு
கல்ல விழு.. என்னை ஆளை விடு”
“ஏய்ய் சத்திமா எனக்கும் ஒன்னும் புரிலடி ..ஷில்பா என்னால புரிஞ்சுக்க முடியல., உனக்கு கண்டிப்பா இது ஓகேவா?”
“.......................”
“உன் புருஷன் கூட படுக்கிறது அவ செய்யட்டும். அவ காசுக்காக
எதுவும் செய்வா. ஆனா அதை நான் எப்படி செய்யறது?”
“ரொம்ப சாரிடி”
“ நீ வாடகை தாய் அது இதுன்னு அல்லாடறப்ப,. சரி வீட்டுல
தான் இப்ப யாருமில்லையே., நாம ஏன் அந்த வேலையை செய்யகூடாதுன்னு நான் நினைச்சேன்”
‘................................”
“அன்னிக்கு உன் வீட்டுல்ல வந்து பாத்தப்ப நீ அழுதிட்டிருந்தே
இல்லே., அப்பவே நான் உனக்கு புள்ளை பெத்து தர ரெடி ஆகிட்டேன். வாடகை தாய்ன்னா என்னன்னு
யூ ட்யூப்லாம் பாத்து வெச்சேன். ஆனா என்னை போய் நளினி ., உன் புருஷன் கூட இருந்து புள்ளை
வாங்கிக்கனு சொன்னதும் நான் கூசி போய்ட்டேன்”
“ரொம்ப சாரிடி”
“உங்களுக்கு உதவிக்கும், உதவற மனசுக்கும் வித்தியாசம்
தெரிலடி”
“ரொம்ப சாரிடி...”
“என்னோட சினை முட்டையும், உங்க வீட்டுக்காரர் உயிரணுவும்
ஒன்னா சேர்ந்து கருவாகி அதை தினம் தினம் ஹாஸ்பிடல்ல இருந்து போட்டோ அனுப்புனாங்க. நான் ஒவ்வொரு நாளும் பார்த்து எவ்வளவு சந்தோஷப்பட்டேன்னு
உனக்கு தெரியாது.. என் கரு. என் பிள்ளை அப்படின்னு ஒரே சந்தோஷம் தெரியுமா?“
“,....................”
“ அப்படிப்பட்ட கருவை தொலைச்சிட்டேண்னு நீ சொன்னப்ப
, நான் எவ்வளவு துடிச்சு போயிட்டேன் தெரியுமா? அந்த ரெண்டு மாசம் நான் பட்ட சந்தோஷம்,
அன்னைக்கு ஒரே நாள்ல போயிடுச்சு”
‘.........................”
“ நானே ஏதோ மறுபடியும் தாய்மை அடைஞாப்போல ஒரு உணர்வு.
ஆனால் அது புஸ்வானம் ஆயிடுச்சு. சரி இதுதான் முடியல, ஒரு வாடகை தாயாக மறுபடி வயித்துல குழந்தை பெத்து தரலாம்னு நான் நினைச்சேன்.
யாருக்கும் தெரியாம அதை நீ உன் குழந்தைன்னு சொல்லிக்கலாம்னு நினைச்சேன். ஆனா என்ன போய்
ரொம்ப சர்வசாதாரணமா அவர் கூட ஒண்ணா இருந்து புள்ளை பெத்து தாடி சொன்னது எனக்கு ரொம்ப
கஷ்டமாயிடுச்சு”
“ ஐயோ ரொம்ப சாரிடி ., அந்த நளினி ஒரு பைத்தியம்”
“ எங்க வீட்டுல என் வீட்டுக்காரர் இல்லை., அவர் வர
ரெண்டு வருஷம் ஆகும். மச்சினன் கூட கனாடல இருக்கான்.., மாமனார், மாமியார் அப்பப்ப வருவாங்க போவாங்க, என்னால
ஒரு ஆறு மாசம் இல்ல ,ஏழு மாசம் வரைக்கும் வயிறு காட்டாம பாத்துக்க முடியும். "
'....................."
"ஒத்தாசைக்கு நீ இருக்க. அந்த கடைசி மூனு மாசம்
கூட, நானும் ரொம்ப நாளா கேரளாவில இருக்குற இருக்கிற என் சித்தி வீட்டுக்கு போகணும்னு
சொல்லிட்டு இருந்தேன். அதை அந்த கடைசி மூன்று
மாசத்திற்கு யூஸ் பண்ணிப்பேன் ., நளினி சொன்னா
போல எங்கனாச்சும் ஒரு ஹாஸ்பிடல்ல இருந்து தங்கி உனக்கு புள்ளையை பெத்து உன் கைல கொடுத்துட்டு,
நான் எப்பவும் போல என் வீட்டுக்கு வந்துடாலாம், யாருக்கு தெரிய போவுதுன்னு பிளான் பண்ணி
இருந்தேன் .வாடகை தாயை போய், பெய்டு கேர்ளாக்கிடியேடி.”
“ ஐயையோ எனக்கு இதெல்லாம் தெரியாம போயிடுச்சுடி. சாரிடி”
“என்னமோ தெரியல. மனசுக்கா இல்ல உடம்புக்கா தெரியல,. வயித்துல ஒரு குழந்தை வேணும்னு
ஏங்குது, குழந்தையே இல்லாம கூட இருந்துடலாம்
போல, ஆனா வயித்துல குழந்தை நின்னு ரொம்ப கேப்
ஆனா அய்யயோ அதை தாங்கவே முடில”
“புரிது”
“தாய்மையும் இல்லாம, வீட்டுக்காரரும் இல்லாம..”
“ப்ச்.. என்னால தான் எல்லாம். நான் ஒழுங்கா அந்த புள்ளையை பெத்திருக்கனும்..ப்ச்”
“ஆனா மது ,அந்த ரெண்டு மாசம் நான் பட்ட அவஸ்தை இருகே?
யப்பா., மறுபடியும் வயித்துல ஒரு சிசு நிக்கணும்னு என் மனசுல இருக்கு. ஆனா இத பத்தி தெரியாம நீ அவர்கூட என்ன படுக்க சொல்லி
ரொம்ப அசிங்கப்படுத்திட்ட”
“ ஐயையோ நான்
எங்கடி சொன்னேன். ..ரொம்ப சாரிடி ,”
‘அவ என்ன பத்தி என்ன நெனச்சி இருக்கான்னு தெரியல ,நீயும்
சும்மா தானே இருந்தே? அவ என்ன பத்தி என்ன நினைப்பா? ஷில்பாவுக்கு தீனா கூட படுக்கிறது
ரொம்ப புடிச்சிருக்கு நினைச்சிடுவா இல்ல? அது என்னுடைய பெண்மைக்கும், கௌரவத்திற்கும்
எவ்வளவு தப்பான அர்த்தமுன்னு உனக்கு தெரியலையா மது?” என சொல்ல
மதுமிதா நெகிழ்ந்து
போனாள். அவளது கைகளை பிடித்துக் கொண்டாள்.
“ உன் மனசுல இவ்வளவு வலி இருக்குன்னு எனக்கு தெரியாது
ஷில்பா. நாம என்ன அதிகபட்சம் ஒரு அஞ்சு வருஷம் பழக்கம் தான். அதுக்காகவே
நீ எனக்காக ஒரு பிள்ளை பெத்து தரேன்னு சொல்றது என்னால கொஞ்சம் கூட நம்பவே முடியல .இந்த
மாதிரியான ஒரு ப்ரண்டு கிடைக்க நான் கொடுத்து வைச்சிருக்கனும்டி.. “
“இந்த வாடகை தாய் விஷயம் அப்பார்ட்மென்டுல யாருக்கும்
தெரியாம இருக்கனும். நான் பிரக்னன்ஸியா ஆவற அப்ப நீ கன்சீவ்னு சொல்லிடு..” ஷில்பா சொல்ல.,
“ம்.. எனக்கு குழந்தை பிறக்குது, பிறக்கல அது விஷயம்
இல்ல. ஆனா நீ மட்டும் என் கூட பேசாம இருக்கறதை என்னால தாங்கிக்க முடியாது” என்றாள்
மதுமிதா. மொட்டை மாடியில் யாருக்கும் தெரியாத அந்த மறைவான இடத்தில் இரு தோழிகளும் ஒருவரை
கட்டிக்கொண்டு ஆறுதல் சொல்லிக் கொண்டார்கள்.
“நாம நளினியை நேரில் வர வைப்போம். இந்த மாதிரி படுக்கிற பிசினஸ் எல்லாம் வேணாம். வாடகை
தாய் மட்டும் போதும். ஷில்பாவுக்கு டெஸ்ட் எடுன்னு சொல்லி கேட்டு பார்ப்போம் “ என்றாள்.
அன்று மாலை நளினி வந்தாள். ஆனால் நளினி வேறுவிதமாய்
சொன்னாள்.
கள்ளம் கபடம் காமம்- 1 - 6