மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Saturday, February 17, 2024

பாகம் 35 - எபிசோடு எண் : 22

 

அன்று இரவு  தனது நண்பரிடம் சொன்ன போது எல்லாரும் சிரித்தார்கள். ‘என்னடா மச்சி புஸ்ஸுன்னு போச்சி. சேம் ஸ்டோரி. அதே கதை..’

“. எப்படியும் ஓரு இங்கலீஷ் டீச்சர் ரோல் இருக்குமுல்ல” ஜோசப் சொல்ல., தணிகா தான் தட்டி கொடுத்தான்.

“மாப்ளை அவனுங்க புரியாம பேசறானுங்க.. நீ அந்தாளை வெச்சி எடு. அது உப்புமா கம்பெனி இல்ல. ஆளு சீரியசான ஆளு..  நீ பொள்ளாச்சி படத்தோடு இந்த ஆளை போட்டு  குழப்பிக்காதே.. புரிதா.. பெரியவர் மியூசிக் படம் தப்பாகாது.. மனசை திடமா வெச்சுக்க.” அவன் சொல்ல.,

 “அம்பதாயிரம் நோட்டு கட்டை பாத்துடான்ல.. அதான் அடிச்சி விடறான்” ஜோசப் கிண்டல் செய்ய.

“ஏய்ய். செவுள்ல போடுவேன்.  கதை நல்லா இருக்கும்னா,  எவன்  நடிச்சா என்னடா? ஆளு கட்டுமஸ்தா இருக்கனும்னா அந்த ஆள் தான் சரி..  நானே அந்த தயாரிப்பளரை  ராஜாகண்னுவை பார்த்திருக்கிறேன், ஆளு நல்ல கட்டுமஸ்தா இருப்பாரு,  நீ மேக்கிங்கல வித்தையை காட்டு நைனா,  அந்த ஆளை ஹீரோவாக நிக்க வை. சீன்ஸ் மட்டும் புதுசு புதுசா யோசி. சென்டிமெண்ட்ல வெச்சு தூக்கு.. ஆங்க்.. பைட் சீன்ஸ் சூப்பரா வச்சிடு . பெஸ்ட் பைட் மாஸ்டரா போடு.. அதுக்கு மேல உன்னை காப்பாத்த பெரியவர் மியூசிக்  இருக்கு..”

“இ.. இல்லடா நானு அர்ஜூன், ரஞ்சித்  இல்லன்னா கார்த்திக்கு வெச்சி எடுக்கலாம்னு பார்த்தேன்..”

மண்ணாங்கட்டி கார்த்திக்குக்கு இந்த படமா? உனக்கு பைத்தியம் தான் புடிச்சிருக்கு.. கிடைச்ச சான்சை விட்டு விடாதே உனக்கு தேவை இப்ப ஒரு படம்.  அதை ஒத்துக்கோ, நீ படம் பண்ணா தான் எங்களுக்கும் ஒரு லைஃப் வரும், புரிஞ்சுக்கோ.. முத்து,  நீ மாயாண்டி கூட இரு..” தணிகா சொன்னான்.

‘இல்லடா உன்னை தான் ஹீரோ ஆக்கனுமுண்னு நினைச்சேன்”

அதுக்கு நான் நல்லா உடம்பு போடனும்.. ஆறு மாசம் ஆகும். நீ அதுக்குள்ள படத்தையே எடுத்து ரிலீஸ் பண்ணிடுவே. அது தவிர, பைட் சீன்ஸ் எல்லாம் எனக்கு ஒத்து வாராது. உன் கேரக்டருக்கு ராஜாகண்ணு தான் சரி..” தணிகா தைரியம் சொல்ல.,

“ஆமாண்டா தணிகா சொல்றது தான் சரி” ஜோசப்பும் ஆறுதலாக சொன்னான் .

 

மறு நாள் செல்வராஜா ஹீரோயினாக ஒரு புதுமுகத்தை செலக்ட் செய்து விட்டு, அன்றே தயாரிப்பாளரை  அழைத்துக்கொண்டு பெரியவர் வீட்டிற்கு பாடல்களை வாங்க போனான். சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான்.

“ நல்லா இரு..எந்த ஊரு?” அவர் கனிவாய் கேட்க, அவன் சொன்னான்.

அந்தப் பெரியவருக்கு ஏற்கனவே கதை சொல்லப்பட்டு இருந்தது. என்றாலும் மறந்து விட்டிருந்தார் . மறுபடியும் அந்த தயாரிப்பாளரை பார்த்து கதையை சொல்ல சொல்ல., செல்வராஜா மிகவும் பவ்யமாக வாயை பொத்திக்கொண்டு,  மெதுவான குரலில் அந்த கதையை சொல்ல அவர் கண்ணை மூடி கேட்டுக்கொண்டார்.

 கிளைமாக்ஸ் வரை கதையை கேட்டதும் கண்ணைத் திறந்து பார்த்தார். அவனைப் பார்த்த பார்வையில் அவருக்கு அந்த கதையை பிடித்து இருந்ததாக செல்வராஜுக்கு தோன்றியது .

கதை எதார்த்தமா நல்லா இருக்குப்பா .சென்டிமென்ட் சீன்ஸ் எல்லாம் நல்ல ஒர்க் அவுட் ஆகும். ஆனா ஒன்னு இந்தப் படத்தை மியூசிக் மட்டுமல்ல., சன்டை சீனும் சேத்து தான் கேரக்டரை காப்பாத்தும். நல்ல மாஸ்டரா போடு..” அவரும் அதையே சொன்னார்.

“ஆகட்டும் சார்.”

சரி எந்தெந்த இடத்துல சாங்ஸ் பிளான் பண்ணி இருக்கே?”  என கேட்க அவன் வரிசையாக சிச்சுவேஷண்களை சொன்னான்.

இவன் ஐந்து இடங்களை சொல்ல.,

“இல்லப்பா.அந்த அம்மா கேரக்டர் செத்தப்பறம் ஒரு சாங்க் வெச்சுக்க. “

“ இல்ல சார்.. அம்மா சென்டிமென்ட் , ஒய்ப் சென்டிமென்டை ஒவர் டேக் பண்னிடும்.”

“பண்ணட்டும்., அந்த அம்மாவை செத்தப்பறம் தான் ஹீரோ புரிஞ்சுக்கறான்..அதை சொல்லி அழுவறான்..அம்மாவோட பிம்பம் தானே மனைவி ” அவர் உடனே ஒரு ஹம்மிங்க் பாடினார். அவனுக்கு புல்லரித்தது.. அம்மாவை நினைத்து கண் கலங்கினான்.

மொத்தம் ஆறு பாடல்கள்.

அவர் எல்லா பாடல்களுக்கும் ஒரு ஒரு ட்யூன் தான் போட்டார் . ஆல்டர்நேட் ட்யூன் கேட்கும் தைரியம் ராஜாகண்னுவுக்கும் இல்லை, செல்வராஜாவுக்கும் இல்லை. அவனிடம் இது வேண்டுமா? அது வேண்டுமா? என எதுவும் அவர் கேட்கவில்லை .

அது அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது . அவனால்  வெறும் ‘தத்தகாராத்தை  வைத்து  மட்டுமே  பாடலின் முழு வீச்சினை புரிந்து கொள்ள முடியவில்லை. மனதில் வைத்துக் கொள்ளவும் முடியவில்லை. கேட்கும்போதே நன்றாக  இருப்பது போலத்தான் தோன்றியது.

 

 அவர் ஆறு பாடல்களையும் ஆறு பாடலுக்கான டியூனை உடனே போட்டுக்கொடுத்துஅடுத்த வாரம்  ரிகார்டிங்க் மறக்காதீங்க’ என்றார் .

சொன்னது போலவே அடுத்த வாரம் ஆறு பாடல்களையும் ரெக்கார்ட் செய்து கேசட்டில்  கையில் கொடுத்துவிட்டார்.

“இது டிராக் தான். மெயின் சிங்கர்ஸை பாட  வெச்சு ரெண்டு மாசத்துல தரேன் போ”

அறையில் அந்த பாடல்களைக் கேட்ட போது எல்லாரும் கண்னீர் விட்டு அழுதார்கள்.

நண்பர்கள் அவனை தலையில் தூக்கிக்கொண்டு கொண்டாடினார்கள்.

“டேய்ய் த்தா இந்தப் படம் ஒரு டிரன்ட் செட்டர்டா... நீ பெரிய ஆளாவ போறேடா. டிராக்கே இப்படினா. மெயின் சிங்கர்ஸ் பாடுனா.. என்ன ஆகும்..? அந்த ராஜாகண்ணு ஒரு முரட்டு ஹீரோவா பீக்ல போயி நிப்பாண்டா.” பாடல்கள் மறுபடி மறுபடி கேட்கப்பட அறை வாசலில் கூட்டம் கூடியது.

“ மாயா.. நீ வேணா பாரு ., படம் ரிலீஸ் ஆனாப்பறம் பட்டிதொட்டி எல்லாம் இந்த பாட்டு ஹிட்டு அடிக்கப் போகுது. தமிழ்நாட்டில ஒரு கலக்கு கலக்க போகுது, உனக்கு மட்டும் இல்ல, இந்த படத்தில் நடிச்ச எல்லாருக்கும் ஒரு லைப் வரப்போகுது., இது சத்தியம்என கத்தினார்கள்.

 “கருவறை கோயிலில். என் தாய் சாமி எங்கே?’ என்ற பாடலுக்கு  எல்லாரும் தாயின் இருப்பை உணர்ந்தார்கள்.

“கொன்னுட்டார்யா பெரியவர்..என் முதல் படத்துக்கு தணிகா ஹீரோன்னா. பெரியவர் தான்யா மியூசிக் “ ஜோசப் சொல்ல அறையில் ஆரவாரம் அதிகரித்தது.

ஒரு வெற்றிப்படத்துக்கான அத்தனை சமிக்ஞைகளையும் அவர்கள் உனர்ந்தார்கள்.